"பா.ஜ.க.வுடன் கூட்டணியை அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை"
ரெட்டியார்சத்திரத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.;
அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் ஆரம்ப காலத்தில் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன்பின்பு 32 லட்சமாக உயர்ந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 கோடியே 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பா.ஜ.க.வை அ.தி.மு.க. தூக்கி சுமந்த காலம் போய்விட்டது. அதனை தூக்கி எறிந்து விட்டோம். அ.தி.மு.க.வை ஒழித்து விட வேண்டுமென்று பா.ஜ.க.வினர் நினைத்தார்கள். ஆனால் அது இனி நடக்காது. அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசினர். பா.ஜ.க.வில் உள்ள அண்ணாமலை அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகளே ஆகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க.வை வசை பாடுகிறார். பா.ஜ.க.வின் கூட்டணி தொடர்வதை அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமையில் செயல்பட்டு வருகிறோம். கட்சியில் வார்டு முகவர்களாக இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஓட்டுக்கள் அதிகம் வாங்குவதற்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அவை தலைவர் வெங்கடாசலம், பாலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் பெரியராசு, செந்தில், சூடாமணி கன்னிவாடி நகர செயலாளர் முருகன், துணைச்செயலாளர் பா.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.