தமிழகத்தில் வேறு யாரும் காலூன்ற முடியாது

தமிழகத்தில் வேறு யாரும் காலூன்ற முடியாது என்றும், இதே நிலை தான் தொடர்ந்து நீடிக்கும் என்றும் திண்டிவனத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2022-12-17 18:45 GMT

திண்டிவனம்:

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திண்டிவனம் வண்டிமேடு அண்ணா திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சியை உடைக்கிறது பா.ஜ.க.

மத்திய அரசு ஆளாத மாநிலங்களில் அந்த மாநிலத்தில் உள்ள ஆட்சியை உடைத்து பா.ஜ.க. ஆட்சியை உருவாக்குகிறது. தமிழக மக்களுக்கு தி.மு.க. நல்லது செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பா.ஜ.க. அரசு, தனது கட்சியினரையே கவர்னராக நியமித்து மக்களுக்கு பயன்படும் எந்த திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் தடுத்து வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த சூதாட்டத்தில் பலர் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்து பலமுறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று பார்த்த பிறகும் அதுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை அறிய வேண்டும்.

தலையை ஆட்டும் அ.தி.மு.க.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும் ஒன்றிய அரசுக்கு தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசு மக்களை மதத்தின் பெயராலும், சாதி பெயராலும் பிரித்து ஆளுகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் அதிகமாக வருகின்றது. தமிழகத்தின் வரியை ஒன்றிய அரசு முழுவதும் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு தர வேண்டிய தொகையை தராமல் இருந்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும். தமிழகத்தில் வேறு யாரும் காலூன்ற முடியாது. இதே நிலை தான் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்ச் செல்வன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பவித்ரம் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஒலக்கூர் சொக்கலிங்கம், ராஜாராம், மயிலம் மணிமாறன், மரக்காணம் தயாளன், பழனி, அரசு ஒப்பந்ததாரர் நந்தகுமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்