திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் யாரும் தாக்கப்படவில்லை, வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-06 11:46 GMT

வடமாநில தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருந்தார். திருவள்ளூர் ரெயில் நிலையம், திருவள்ளூர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சப்பட தேவையில்லை

இந்நிலையில் இது தொடர்பாக திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா விளக்கம் அளித்துள்ளார். அதில் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லை. தாக்கப்படுவதாக வரும் தகவல் அனைத்தும் தவறானவை. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எனவே வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தார் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்