அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் வருகை குறைகிறது

அம்மா உணவகங்களுக்கு மக்கள் வருகை குறைவதால் மதிய உணவு விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. எனவே மக்களை கவரும் வகையில் உணவுகளை தயாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-19 21:03 GMT


அம்மா உணவகங்களுக்கு மக்கள் வருகை குறைவதால் மதிய உணவு விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. எனவே மக்களை கவரும் வகையில் உணவுகளை தயாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மா உணவகம்

அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மலிவு விலையில் வயிராற உணவு வழங்குவதற்கு தொடங்கப்பட்ட உன்னத திட்டம் அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த திட்டம் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

மகளிர் குழு பராமரிப்பு

தஞ்சை மாநகராட்சி சார்பில் தஞ்சை திலகர்திடல் மற்றும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகங்களை மகளிர் குழுவினர் பராமரித்து வருகின்றனர். உணவகங்களில் காலையில் இட்லி ஒன்று ரூ.1-க்கும், மதியம் கலவை சாதம் ரூ.5-க்கும், தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தஞ்சை மாநகரில் உள்ள 2 அம்மா உணவகங்களில் காலையில் வழங்கப்படும் இட்லியை தேக்கம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மதியம் வழங்கப்படும் கலவை சாதத்திற்கு முன்பு போல் வரவேற்பு இல்லை. தயிர்சாதம், சாம்பார் சாதம் மிச்சப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளை சாதம், ரசம் போன்றவற்றை கூடுதலாக சமைத்து மகளிர் குழுவினர் வழங்கி வருகின்றனர். அப்படி இருந்தும் மதிய வேளைகளில் மக்கள் குறைவாக வருவதால் விற்பனை குறைந்து சாதம் மிஞ்சுகிறது.

சொந்த பணத்தை போடும் நிலை

அதுமட்டுமின்றி ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்ட தயிர் சாதம் விலை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகங்களை நடத்தும் மகளிர் குழுவினர் தினமும் குறிப்பிட்ட தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும். இந்த தொகையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் பல நேரங்களில் சொந்த பணத்தை போட்டு தான் பணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என வருத்தத்துடன் மகளிர் குழுவினர் தெரிவித்தனர்.தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிடம் நல்ல முறையில் உள்ளது. ஆனால் திலகர் திடல் அம்மா உணவக வளாக நுழைவு இரும்பு கதவு உடைந்துள்ளது. மற்றொரு கதவு திறக்க முடியாத அளவுக்கு பூட்டியே கிடக்கிறது. இதற்கு காரணம் சாலை விரிவாக்க பணி நடந்தபோது படிக்கட்டுகள் இடிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மதிய உணவு மிஞ்சுகிறது

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் அம்மா உணவக பெண் ஊழியர் ஜீவமணி கூறும்போது, காலை உணவாக இட்லி, சம்பார் வழங்கப்படுகிறது. சுமார் 700 இட்லி தினமும் விற்பனையாகும். காலை உணவை பொருத்தவரை விற்றுவிடும். ஆனால் மதிய உணவு விற்பனை மந்தமாகவே இருக்கும். ஆனாலும் நாங்கள் கூடுதல் நேரம் அம்மா உணவகத்தை திறந்து வைத்து மதிய உணவை விற்க முடிவு செய்வோம். அப்படி இருந்தும் மதிய உணவு மிச்சமாக இருந்துவிடுகிறது என்றார்.

மக்கள் கருத்து

மதிய உணவு சாப்பிட வந்த தஞ்சை பன்னீர்செல்வம் கூறும்போது, எனக்கு ஆண் வாரிசு கிடையாது. பெண் குழந்தைகளுக்கு திருமணமாகிவிட்டது. இதனால் காலை மற்றும் மதிய உணவுவை அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வருகிறேன். மதியம் வாங்கி செல்லும் உணவை இரவு நேரத்திற்கும் பயன்படுத்தி கொள்வேன். ஏழை, எளிய மக்களுக்கு வரபிரசாதமாக உள்ள இந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.மதிய உணவு சாப்பிட வந்த திருச்சி மூதாட்டி வள்ளிமயில் கூறும்போது, மதிய உணவு நன்றாகவே இருக்கிறது. ரசமும், சாதமும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அம்மா உணவகம் தொடர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்