ரெயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்கிய நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மெட்ரோ ரெயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.;

Update: 2023-04-15 20:08 GMT

அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்கிய அல்ட்ஸ்டோம் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதன் மூலம் அந்நிறுவனத்திடம் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி பெற்றதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2010-ம் ஆண்டு ரெயில் பெட்டிகள் வாங்கியதில் 'அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறானது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதன் மூலம் நிதி சேமிப்பை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

டெண்டரில் திருத்தம்

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரெயில் பெட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டது. இருந்தபோதிலும் இந்த டெண்டருக்கு மத்திய அரசின் பலன் கிடைக்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகளில் 2 திருத்தங்கள் செய்யப்பட்டது.

இந்த 2 திருத்தங்களும் டெண்டர் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் அனைத்து ஏலதாரர்களும் சரிசமமாக நடத்தப்பட்டனர். அதே வேளையில் ரெயில் பெட்டிகளை ஏலதாரர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் இந்த டெண்டர் ஊக்கப்படுத்தியது.

செலவை குறைத்தது

டெண்டரின்போது ஒரு நிறுவனம் முக்கியமான தொழில்நுட்ப அளவுகோலை பூர்த்தி செய்ய தவறி விட்டன. தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெறவில்லை. 3 நிறுவனங்கள் மட்டும் தொழில்நுட்ப தகுதியை பெற்றிருந்தன.

இந்த 2 நிறுவனங்கள் திருத்தப்பட்ட அறிவிப்பின்படி டெண்டர் கோரி உள்ளன. ஒரு நிறுவனம் மட்டும் அவ்வாறு செயல்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் டெண்டர் நிராகரிக்கப்பட்டது.

கடைசியாக அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனமே ஏலத்தை பெறுவதற்கு தகுதி பெற்றது. இந்த டெண்டர் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செலவை குறைத்தது.

ரூ.250 கோடி மிச்சம்

மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்கான ஏல அறிவிப்பு முதலில் வெளியிடப்பட்டபோது ஒரு பெட்டியின் விலை ரூ.10 கோடி என இருந்தது. அந்த நேரத்தில் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஏலத்தின் மூலம் ஒரு பெட்டியை சுமார் ரூ.10 கோடிக்கு வாங்க முடிவு செய்தது.

மத்திய அரசின் புதிய அறிவிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒரு பெட்டியை சுமார் ரூ.8.57 கோடிக்கு வாங்க முடிந்தது. இதன்மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சுமார் ரூ.250 கோடியை மிச்சப்படுத்தியது.

அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், சென்னை மெட்ரோ ரெயில் பெட்டியை உற்பத்தி செய்து கொடுத்தது உள்ளிட்ட அரசின் திட்டங்களை ஷெல் நிறுவனங்கள் மூலம் பெற லஞ்சம் கொடுத்ததற்காக பல்வேறு நாடுகளில் அபராத நடவடிக்கையை எதிர்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றச்சாட்டுகள் தவறானவை

ஒப்பந்தம் எடுத்தவர் இத்தகைய தகாத நடத்தைக்காக தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டார் என்பது உண்மைதான். இதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரெயில் பெட்டி கொள்முதலுடன் அவற்றை இணைப்பது முற்றிலும் தவறானது.

அல்ஸ்டோம் நிறுவனத்தின் தண்டனை நடவடிக்கைகளுக்கும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்ட கொள்முதலை பொறுத்தமட்டில் நியாயமான மற்றும் வலுவான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாகும்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்