என்எல்சி நிர்வாகம் வேண்டாம் என தெரிவிக்கவில்லை: விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உகந்த நிறுவனமாக செயல்பட வேண்டும் நெய்வேலியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

என்.எல்.சி. நிர்வாகம் வேண்டாம் என தெரிவிக்கவில்லை என்றும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உகந்த நிறுவனமாக என்.எல்.சி. செயல்பட வேண்டும் என்றும் நெய்வேலியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-08-10 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலியில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல், சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 16-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

அதன்படி, நேற்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மதியம் நெய்வேலிக்கு வந்தார். தொடர்ந்து அவர் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களை சந்தித்து அவரது ஆதரவை தெரிவித்தார்.

அதிகாரம் கொடுத்தது யார்?

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.எல்.சி. நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு அறிவிக்கின்ற அனைத்து மசோதாக்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஏன்? தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேச மறுக்கிறார் என தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலங்களை இவ்வளவு நாள் கையகப்படுத்தாமல் காத்திருந்தீர்கள், அது போன்று விளைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் சூழ்நிலையில் இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா?

சுற்றுச்சூழல் பாதிப்பு

என்.எல்.சி. நிர்வாகம் வேண்டாம் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் செவி கொடுத்து கேட்பதில்லை என்பதால் தான் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டிக்கின்றோம்.

என்.எல்.சி. நிர்வாகத்தால் கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து குடிநீர் முழுவதும் கந்தக துகள்களால் பாதிப்படைந்துள்ளது.

மக்களுக்கான நிறுவனம்

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உகந்த நிறுவனமாக என்.எல்.சி. நிறுவனம் செயல்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றலாம், ஆனால் ஒரு நிர்வாகம் அப்படி ஏமாற்றக்கூடாது.

மக்களுக்கான ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். தே.மு.தி.க.வை பொருத்தவரையில் என்றைக்கும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உடன் நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், மாவட்ட பொருளாளர்கள் ராஜ், மணிகண்டன், கம்மாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஞானபண்டிதன், நெய்வேலி நகர செயலாளர் வைத்தியநாதன், உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்