என்.எல்.சி. தொழிலாளர்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் ஜீவா தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

வேலைநிறுத்தம் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், என்.எல்.சி. தொழிலாளர்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜீவா தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

Update: 2023-08-03 18:58 GMT

நெய்வேலி, 

9-வது நாளாக வேலைநிறுத்தம்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நிரந்தர வேலை வழங்க வேண்டும், இல்லையென்றால் அதுவரையில் மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு நடைபெறும் இவர்களது போராட்டம் நேற்று 9-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் விடுதலை புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வந்தனர்.

ஆதரவு

அவர்களை போராட்டம் நடைபெறும் இடத்திற்கே முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு தலைவர் சேகர், சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அங்கு சென்று அவர்களை சந்தித்தனர். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் விடுதலை புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.

இந்த நிலையில் நேற்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் என்.எல்.சி. தலைவர் வீட்டிற்கு பேரணியாக செல்ல இருந்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அங்கு சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம் தொடரும்

அப்போது அவர் பேசுகையில் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மாவட்ட நிர்வாகம் ஒரு கமிட்டி அமைக்க உள்ளது. அந்த கமிட்டியின் மூலம் என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும். அதுவரை இந்த போராட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றார். அதற்கு தொழிற்சங்கத்தினர், நாங்கள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்கிறோம், ஆனால் சுமூக உடன்பாடு எட்டும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இடமாற்றம்

தொடர்ந்து ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவுப்படி நாங்கள் எங்கள் போராட்ட இடத்தை மாற்றுகிறோம். நாளை(அதாவது இன்று, வெள்ளிக்கிழமை) காலை 5 மணி முதல் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

தொடர்ந்து காலை 6 மணிக்கு 1-வது சுரங்கத்திற்கு முதற்கட்ட பணிக்கு செல்லும் தொழிலாளர்களை மறித்து அறவழியில் போராடுவோம், நாளை(சனிக்கிழமை) 2-வது சுரங்க நுழைவுவாயில் முன்பு தொழிலாளர்களை வழிமறித்து போராடுவோம், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அனல்மின் நிலையங்களின் நுழைவு வாயிலிலும் தொழிலாளர்களை மறித்து போராடுவோம்.

பின்னர், தமிழக அரசு கதவு திறக்கும் வரை மந்தாரக்குப்பம், வடலூர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்