297 இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துள்ளனர்... ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது - என்.எல்.சி. மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

என்.எல்.சி. சமீபத்தில் 297 இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துள்ளனர்... ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-11 06:47 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனிடையே, என்.எல்.சி நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்தை கடலூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாமக நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் கடலூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு அரசு ஒருபக்கம் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போடுகிறார்கள்... மறுபக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி துன்புறுத்தில் காவல்துறையை வைத்து நிலங்களை பிடுங்கி அதை என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் விவசாய எதிரான போக்கை கண்டிக்கின்றோம். இது நெய்வேலியை சார்ந்த என்.எல்.சி. பிரச்சினை கிடையாது. என்.எல்.சி.யால் 5 மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் என்.எல்.சி-யை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடி வருகிறது.

என்.எல்.சி வருவதற்கு முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 1,000 அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி.

10 ஆயிரம் ஏக்கம் நிலம் இன்று என்.எல்.சி.யிடம் உள்ளது. அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலே இன்று பழுப்பு நிலக்கரியை எடுத்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம்.

மத்திய அரசு என்.எல்.சி நிர்வாகத்தை 2025-க்கும் தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒன்று கூறினால் அது 100 சதவிகிதம் உண்மையாகத்தான் இருக்கும்.

அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சி.யை தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 ஆண்டுக்குள் என்.எல்.சி.யை விற்க உள்ள மத்திய அரசுக்கு மாநில திமுக அரசு எதற்கு மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி நிலங்களை கையகப்படுத்திகொடுக்கிறது.

அங்கே இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கவில்லை. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்த மக்களுக்கு மொத்தத்தில் 1,800 பேருக்கு தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 1,800 பேரில் அனைவரும் தற்போது வேலையில் இல்லை. அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்காலிகமாக சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளனர்.

என்எல்சி சமீபத்தில் 297 பேர் ஜூனியர் இன்ஜினியர் வேலையில் எடுத்தனர். அதில் ஒரு நபர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது. வேலையும் கொடுப்பதில்லை... வாழ்வாதாரத்தை அழிக்கிறது. நிலத்தடி நீர், விவசாயத்தை ஒழித்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பாதிப்பு. அதனால் தான் என்.எல்.சி.யை பாமக எதிர்க்கிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்