நீலகிரி புளூஸ் அணி சாம்பியன்
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி புளூஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தில் 44 அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள் ஏ, பி, சி என 3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்ற 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான பிரீமியர் லீக் போட்டிகளில் 6 அணிகள் லீக் சுற்று போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, அதிக புள்ளிகளை பெற்ற நீலகிரி எப்.சி. அணியும், நீலகிரி புளூஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீலகிரி புளூஸ் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணி மற்றும் 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.