புதிதாக பரவும் கொரோனா தொற்று: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்
புதிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. இருந்தபோதிலும் கடந்த வாரத்தில் தொற்று லேசான எழுச்சி கண்டுள்ளது. மே மாதம் 27-ந்தேதியோடு முடிவடைந்த வாரத்தில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 335 பேராக இருந்தனர். 3-ந் தேதியுடன் (நேற்று) முடிவடைந்த வாரத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 659 ஆக அதிகரித்துள்ளது.
3-ந் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 3.13 சதவீதம் ஆகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை ஆய்வு செய்ததில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டங்களில் மாநில நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்.
5 அம்ச நடவடிக்கைகள்
பரிசோதனை செய்தல், கண்காணிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகப்படியான கவனம் செலுத்தவேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல், புதிய பாதிப்புகள் கொத்தாக ஏற்படுவதை கண்காணித்தல், கூடுதல் பரிசோதனை செய்தல், தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்து நோய் பரவுவதை தடுத்தல் உள்பட 5 அம்ச நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி பரிசோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொற்று பரவுவதை தடுக்க கண்டிப்புடன் கண்காணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நீங்கள் முறையான நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் கூட்டு நடவடிக்கைக்காக தேவையான உதவிகளை மாநிலங்களுக்கு தொடர்ந்து வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.