செட்டி ஏரி வறண்டதால் அரியலூரில் புதுமண தம்பதிகள் ஏமாற்றம்
செட்டி ஏரி வறண்டதால் அரியலூரில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆடி மாதம் 18-ம் நாள் இந்துக்களால் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆற்றின் கரையோரங்கள் மற்றும் ஏரி, குளங்களில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவதும், பெண்கள் புது மஞ்சள் கயிறு மாற்றுவதும் வழக்கம். புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். அரியலூர் நகரை பொருத்தவரை செட்டி ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏரியில் நீர் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியர் ஏமாற்றம் அடைந்தனர். செட்டி ஏரியானது வறண்டு உள்ள சூழ்நிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை வெட்டி அகற்றுவதுடன், ஏரியை தூர்வாரினால் வருங்காலங்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.