12 பள்ளிக்கூடங்களில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
வள்ளியூர் யூனியன் பகுதியில் 12 பள்ளிக்கூடங்களில் புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் யூனியன் பகுதியில் 12 பள்ளிக்கூடங்களில் புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
ஸ்மார்ட் வகுப்பறை
வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் பஞ்சாயத்து சின்னம்மாள்புரம், ஆச்சியூர், துலுக்கர்பட்டி, வைத்தியலிங்கபுரம், ஆனைகுளம், கண்ணநல்லூர் பஞ்சாயத்து கண்ணநல்லூர், பனிச்சகுளம், சித்தூர், தங்கையம், வில்வனம்புதூர், கோவன்குளம் பஞ்சாயத்து சீயோன்மலை, கோவன்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மேலும் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ஆனைகுளம் ஊராட்சி ஆச்சியூரில் ரூ.2.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், கண்ணநல்லூர் பஞ்சாயத்து காமராஜ் சிலை அருகில் ரூ.7 லட்சத்தில் கலையரங்கம், ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், தங்கையத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தடுப்பணை கட்டப்படும்
கண்ணநல்லூர் ஊராட்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "விவசாயத்திற்காக கண்ணநல்லூர், நெடும்பூர், சித்தூர், கீழ்குளம் ஊர் குளங்களில் கால் அமைத்து தரப்படும். இன்னும் 18 மாதங்களில் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படும். நம்பியாற்றின் கரையில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தடுப்பணை கட்டி தரப்படும். முதியோர் பென்ஷன், புதிய ரேஷன் அட்டைகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி தருவேன்" என்றார்.
நிகழ்ச்சியில் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன், துலுக்கப்பட்டி ஷேக், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பொறியாளர் செண்பகவள்ளி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.