திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் புதிய வெள்ளி தேர்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட புதிய வெள்ளி தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.;
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், பிரம்மோற்சவங்கள் நடக்கும்போதும் மாடவீதியில் உற்சவர் உலா வருவதற்கு வசதியாக தங்கத்தேர், வெள்ளித்தேர் கோவிலில் இருந்தன. ஆனால் வெள்ளித்தேர் பழுதடைந்ததால், புதிய வெள்ளித்தேர் அமைக்கப்பட்டது.
புதிய வெள்ளித்தேரை நேற்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
ஊதிய உயர்வு
கடந்த 6 ஆண்டுகளாக 48 முதுநிலை கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7-வது ஊதிய உயர்வு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இது குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டு 2014 ஊழியர்களுக்கு 7-வது ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
இதில் திருத்தணி முருகன் கோவிலில் 214 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதற்கட்டமாக 2 கோடி 35 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம், பணியில் இருக்கும் போது உயிரிழந்த 9 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளோம்.
திருத்தணி முருகன் கோவிலில் 5 ஆண்டுகள், ராமேஸ்வரம் கோவிலில் 12 ஆண்டுகள், சமயபுரம் கோவிலில் 10 ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் இருந்த தங்க தேர்களை சீரமைத்து வீதி உலா காண வைத்துள்ளோம். இதேபோல் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4 கோடி செலவில் திருத்தணி முருகன் கோவில் வெள்ளித்தேர் வீதி உலா காண வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சனாதன கோட்பாடுகளை எதிர்க்கிறோம்
அப்போது அவரிடம், வருகிற 10-ந் தேதிக்குள் நீங்கள் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை கூறி உள்ளாரே? என்று நிருபர்களிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
எனக்கு பதவி வழங்கியது. முதல்-அமைச்சர். அண்ணாமலை கிடையாது. எங்களுக்கு சனாதனமும், இந்து மதமும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் இந்து மதம் போன்றது என்றால், தோள் சனாதனம் போன்றது. இதில் தேவையானதை மட்டும் நாங்கள் எடுத்துக் கொண்டு தேவையில்லாத தோலை தூக்கி வீசி விடுவோம். நாங்கள் சனாதன கோட்பாடுகளை மட்டுமே எதிர்க்கிறோம். இந்து மதத்தை அல்ல.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பிரச்சாரம் தோல்வியடைந்ததால் இது போன்று பேசி வருகிறார், இதனால் திராவிட மாடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.