புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-08 08:33 GMT

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகிறது. இது நாளை முதல் 11-ந் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 11-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். 12-ந்தேதி அநேக இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்