தர்ணா போராட்டத்தால் துணை மேயர் பெயருடன் புதிய கல்வெட்டு பதிப்பு

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தையொட்டி துணை மேயர் பெயருடன் கூடிய புதிய கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டது.

Update: 2023-05-11 19:58 GMT

திருப்பரங்குன்றம், 

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தையொட்டி துணை மேயர் பெயருடன் கூடிய புதிய கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டது.

கல்வெட்டில் பெயர் இல்லை

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி அன்று சுதந்திர தின பவளவிழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் 2 புதிய கல்வெட்டுக்கள் பதிக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில் மேயர், கமிஷனர் பெயரும், மற்றொரு கல்வெட்டில் மேற்கு மண்டல உதவி ஆணையாளர், மண்டல தலைவர் பெயரும் இடம்பெற்று இருந்தது. இதே சமயம் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 21 வார்டுகளில் ஒன்றான 80-வது வார்டின் கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை. இதனால் தன் பெயருடன் கூடிய புதிய கல்வெட்டினை சொந்த செலவில் தயார் செய்து அதை பதிக்குமாறு அதிகாரியிடம் துணை மேயர் வலியுறுத்தினார். அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை

1 மணிநேரம் வெயிலில் தர்ணா

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி கமிஷனர், மேயர் கலந்து கொண்ட போதிலும் துணை மேயர் பங்கேற்கவில்லை முகாம் முடிந்து மேயர், கமிஷனர் சென்ற நிலையில் அலுவலகத்திற்கு வந்த துணை மேயர் நாகராஜன் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் துணை மேயருக்கான அங்கீகாரம் இல்லை. கல்வெட்டில் பெயர் இல்லை.

புதிய கல்வெட்டு தயார் செய்து கொடுத்த போதிலும் அதை வைக்கவில்லை என்று கூறி வெயிலில் 1 மணிநேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளும்கட்சியான தி.மு.க.வுடன் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேர்ந்த துணை மேயர் நாகராஜன் தர்ணா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

புதிய கல்வெட்டு பதிப்பு

இந்த நிலையில் மேயர் இந்திராணி செல்போனில் துணை மேயருடன் தொடர்பு கொண்டு புதிய கல்வெட்டு வைக்கப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தை துணை மேயர் கைவிட்டார்.

இந்த நிலையில் நேற்று துணை மேயர் பெயர் இல்லாத கல்வெட்டை அப்புறப்படுத்திவிட்டு மேயர், கமிஷனர் மற்றும் துணை மேயர் பெயருடன் கூடிய புதிய கல்வெட்டினை சுவரில் பதித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது அதிகாரிகள் வட்டாரத்திலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்