புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-02 20:30 GMT

சோமரசம்பேட்டை:

புதுப்பெண்

சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 27). பெயிண்டர். இவருக்கும் கரூர் மாவட்டம், பச்சம்பட்டியை சேர்ந்த சித்ரா(வயது 23) என்பவருக்கும், கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து முருகானந்தம் மனைவி மற்றும் தனது தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். முருகானந்தத்தின் தாய், தந்தை அருகில் உள்ள சம்சா கடையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை முருகானந்தம் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சித்ராவின் மாமியார், வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததை பார்த்து வெகு நேரமாக கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து உடனடியாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

மது விற்ற 2 பேர் கைது

*துவாக்குடியை அடுத்த அண்ணா வளைவு பகுதியில் பெண் ஒருவர் அதிக விலைக்கு மது விற்பதாக துவாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரதிதாசன் தெருவை சேர்ந்த சந்திரசேகரின் மனைவி ராணி (42) என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

*திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற நேதாஜி தெருவை சேர்ந்த இளமாறன் (56) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 63). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, அவருடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள், அதனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி தேவதானம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (63). இவர் திருச்சி அல்லிமால் வீதியில் அச்சகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நாகராஜன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய மகன் வினோத் (34) கொடுத்த புகாரின்பேரில் திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நாகராஜனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்