கோவை சாடிவயலில் ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

யானை பாகன்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2023-03-15 06:53 GMT

சென்னை,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியினர் பொம்மன்-பெள்ளியை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். அவர் விடுத்த அழைப்பின் பேரில் பொம்மன்-பெள்ளி தம்பதியினர் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களிடம் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் யானை பாகன்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் கோவை, சாடிவயலில் புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்