புதிதாக ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம்: பதிவு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்

புதிதாக ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு சான்றிதழை கலெக்டர் வழங்கப்பட்டது.

Update: 2023-05-31 19:11 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறையின் கீழ் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 10-ன் கீழ் புதிதாக கரூர் மாவட்ட ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கம் கடந்த 22-ந் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிவு சான்றிதழை கலெக்டர் பிரபுசங்கர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

கூட்டுறவுத்துறையின் கீழ் கரூர் மாவட்டத்தை செயல் எல்லையாக கொண்டு ஒய்.கே.168. கரூர் மாவட்ட ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கம் கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வாரியங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு சார்ந்த தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் கணினி இயக்குபவர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர், விற்பனையாளர், கட்டுனர், வீட்டு வேலை செய்பவர், சமையல்காரர், சலவை தொழிலாளி, ஆசிரியர், தையல்காரர், மருந்தாளுனர், வேதியியலாளர், அரவையாளர், எந்திரங்கள் இயக்குபவர், ஆய்வக உதவியாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று அப்பணிகளை சங்கத்தில் உறுப்பினராக உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு பணி வழங்கிடுவதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளது.

ஆகவே, இச்சங்கத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் சங்கத்தை எண்.9, அருண்டவர், ஆதிகிருஷ்ணபுரம் என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கரூர் சரக துணைப்பதிவாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்