ஓசூரில்ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
ஓசூரில் ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்.
ஓசூர்
ஓசூரில் ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்.
புதிய பஸ் நிலையம்
ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராஜ், மாவட்ட கலெக்டர் சரயு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சினேகா வரவேற்றார்.
பின்னர், நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.550 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு தற்போதைய மக்கள் தொகை 4 லட்சம் ஆகும். மேலும், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி, எம்.ஜி.ஆர். வணிக வளாகத்தில் ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஓசூர் காமராஜ் காலனி பகுதியில், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுற்று தயாராக உள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.
கடனுதவி
ஓசூர் பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில் ரூ.19 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஓசூர் மாநகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக, மாநகராட்சியில் ரூ.550 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவுள்ள பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர்கள் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர். மேலும், 15 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினர்.
இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளார் சண்முகநாதன், மேற்பார்வை பொறியாளர் ஜெயகுமார், நிர்வாக பொறியாளர்கள் லோகநாதன், சேகர், துணை மேயர் ஆனந்தைய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், பேரண்டபள்ளி ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் நன்றி கூறினார்.