நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி செய்த 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

Update: 2023-09-12 20:23 GMT


மதுரையை தலைமை இடமாக கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் அதிக வட்டி தொகையை செலுத்துவதாகவும், திட்டத்தின் முடிவில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவோம் என்றும் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பி பலர் தங்களது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கூறியபடி உரிய தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஏராளமானோர் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிலர் கைதாகி உள்ளனர். நிறுவன இயக்குனர்கள் பலர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்