நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-03 19:10 GMT

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில்

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆனி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், 7.40 மணிக்கு பூங்கோவில் சப்பரம் உள்வீதி உலா வருதல் நடைபெற்றது.

கொடியேற்றம்

தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள பெரிய கொடிமரத்தில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். மேலும் கோவில் கலையரங்கில் மங்கள இசை, பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு, வாசுகி மனோகரின் பக்தி இன்னிசை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

11-ந் தேதி தேரோட்டம்

விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதிஉலா வருதல் நடக்கிறது.

மாலையில் கலையரங்கில் பல்வேறு பக்தி சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) 9-ம் திருநாள் அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர்.

காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் என மொத்தம் 5 தேர்கள் இழுக்கப்படுகிறது. மறுநாள் 12-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்