நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால் அதிக வெளிச்சம் தரும் பல்புகளை பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-06-14 21:35 GMT

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்க தலைவர் முகமது அயூப் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை டவுன் நயினார்குளம் சாலை சந்தி விநாயகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது அங்கு பயணிகள் அமரும் இருக்கைகள் இல்லை. இதனால் பயணிகள் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். எனவே அங்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். நெல்லையின் அடையாளங்களின் ஒன்றான ஈரடுக்கு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் போதிய வெளிச்சமின்றி இருப்பதால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதிகளில் தடுமாறி செல்கிறார்கள். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர், அ.தி.மு.க. நிர்வாகி நெடுஞ்செழியன் ஆகியோர் மேயரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ''28-வது வார்டுக்கு உட்பட்ட கல்லத்தி முடுக்கு தெரு, சுந்தரர் தெரு, பாரதியார் தெருக்களில் சாக்கடை கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்றை பரப்பும் அபாயம் உள்ளது. முத்துராமலிங்கபுரம் வயல் தெருவில் ரூ.14 கோடி செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் பொதுப்பணித்துறையினர் சாக்கடை கலந்த கழிவு மண்ணை கொட்டி உள்ளனர். எனவே குப்பை மற்றும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்