கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு

குமரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. இதை 4,594 பேர் எழுதினார்கள்

Update: 2023-05-07 21:16 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. இதை 4,594 பேர் எழுதினார்கள்.

6 மையங்களில் 'நீட்' தேர்வு

பிளஸ்-2 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்கிறார்கள்.

அவ்வாறு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அளவில் நடத்தப்படும் 'நீட'் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுத 6 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. அதாவது நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, நாகர்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 715 மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

4,594 பேர் எழுதினர்

அதைத்தொடர்ந்து நேற்று 'நீட்' தேர்வு நடந்தது. இதில் 6 மையங்களிலும் மொத்தம் 4 ஆயிரத்து 594 பேர் 'நீட்' தேர்வை எழுதி னர். 121 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 'நீட்' தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடந்தது.

ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதாவது மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல தரையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தது. அதற்குள் மாணவ-மாணவிகள் வரிசையாக நின்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மாணவிகள் சடை போட்டு செல்ல அனுமதியில்லை. இதனால் சடை போட்டு வந்தவர்கள் அதை அவிழ்த்து விட்டு தலைவிரிகோலத்துடன் சென்றனர். மேலும் மாணவிகள் துப்பட்டா, தங்க சங்கிலி, மோதி்ரம், கொலுசு மாணவர்கள் கைக்கெடிகாரம், ஷூ அணிந்து செல்ல அனுமதியில்லை.

வெப்ப பரிசோதனை

மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை காட்டிய பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசரும் வழங்கப்பட்டது. சில மாணவர்கள் வெயிலில் காத்திருந்ததால், அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தபோது, அதிகமாக இருந்தது.

அந்த மாணவர்களை சிறிது நேரம் நிழலில் அமர வைத்து, பின்னர் வெப்ப நிலையை பார்த்து சீரானதும், முககவசத்துடன் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் கையில் 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி திரவம் மற்றும் தண்ணீர் பாட்டிலையும் கொண்டு சென்றனர்.

காத்திருந்த பெற்றோர்

நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கார், இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் காலை 11 மணிக்கு முன்னதாகவே வந்ததால் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் சாலையோரம் காத்திருந்தனர்.

மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களது வருகைக்காக பெற்றோர் அங்கேயே காத்திருந்தார்கள். இதனால் அவர்கள் வந்த வாகனங்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி இருந்தனர். அதேசமயம் தேர்வு மையம் முன் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

நீட் தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்துக்குள் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.இதைதொடர்ந்து தேர்வு மையங்களின் மெயின் நுழைவு வாசல் மூடப்பட்டது. அப்போது தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே காத்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்