செட்டிநாடு விமான ஓடுபாதையில் விமானங்கள் இயக்க தேவையான முன்னேற்பாடு செய்யப்படும்-மத்திய இணை மந்திரி வி.கே. சிங் பேட்டி

செட்டிநாடு விமான ஓடுபாதையில் விமானங்கள் இயக்க தேவையான முன்னேற்பாடு செய்யப்படும் என மத்திய இணை மந்திரி வி.கே. சிங் கூறினார்.

Update: 2022-12-28 18:32 GMT

திருப்பத்தூர்

செட்டிநாடு விமான ஓடுபாதையில் விமானங்கள் இயக்க தேவையான முன்னேற்பாடு செய்யப்படும் என மத்திய இணை மந்திரி வி.கே. சிங் கூறினார்.

சாமி தரிசனம்

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவிலில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு நிருபர்களிடம் கூறியதாவது:- காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன் வருமானால் அதற்கான முன்னேற்பாடு செய்து கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக கவர்னர் ஆன்லைன் ரம்மி போன்ற தமிழ்நாடு சட்டசபையில் ஏற்றப்படும் மசோதாக்களை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொறுத்தவரை தமிழக அரசு விவரங்களில் நான் தலையிட விரும்பவில்லை.

இருப்பினும் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட தமிழக கவர்னரை அறிவுறுத்துவோம். தமிழகத்தில் பா.ஜ.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களையும், கிராமங்களையும் வளர்ச்சி அடைய செய்து உயர்த்தி விடுவது எங்களது திட்டம். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது. அப்போது கூட்டணி குறித்த பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனைக் கூட்டம்

இதைதொடர்ந்து தேவகோட்டை சாந்தி மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் பிரிவு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு மரத்திற்கு எப்படி விழுதுகள் இருக்கிறதோ அதேபோல் பாரதீய ஜனதா கட்சிக்கு சார்பு அமைப்புகள் விழுதுகளாக உள்ளன. உங்களுடைய உழைப்பு தான் முக்கியம். மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் நமது கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும். அதில் வெற்றி காண வேண்டும். முடியாத போதுதான் மாவட்ட அளவில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு நடராஜபுரம் பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். மத்திய மந்திரியுடன் சசிகலா புஷ்பா எம்.பி., மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்