விளாத்திகுளம் அருகே மினி லாரியில் 460 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் 460 கிலோ கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் 460 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி அருகே கலைஞானபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த 3-ந் தேதி அன்று கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் போில் சூரங்குடி போலீசார் கலைஞானபுரம் பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த மினி ஆட்டோ, மினி லாரியில் 460 கிலோ கஞ்சாவும், 240 லிட்டர் மண்எண்ணெய்யும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சா, மண்எண்ணெய்யுடன் மினி லாரி, மினி ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி, விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்த ராஜாமாணிக்கம் மகன் கவிபாரதி (வயது 36), அருப்புக்கோட்டை எம்.சிலுக்கப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் பாண்டியராஜன் (25) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஸ்வரன் (32) ஆகிய 3 பேரும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மண்எண்ணெய் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு சென்று கவிபாரதி, பாண்டியராஜன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.