வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஆம்புலன்ஸ் ஊழியர் சாவு

வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஆம்புலன்ஸ் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-05-05 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே மதுபோதையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாலையில் தவறி விழுந்து பலியானார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த கனகராஜ் மகன் விஜய் (வயது 25). இவர் தூத்துக்குடியில் 108 ஆம்புலன்சில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர் சசிகுமாருடன் தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வல்லநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சசிகுமார் ஓட்டிச்செல்ல, விஜய் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தவறி விழுந்து சாவு

தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே உள்ள முருகன்புரம் விலக்கில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் மீண்டும் சாலையில் இருந்து எழுந்த சசிகுமார் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வல்லநாடுக்கு சென்று விட்டாராம். பலத்த காயங்களுடன் நீண்டநேரமாக சாலையில் விழுந்து கிடந்த விஜய் பரிதபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விஜய் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்