உத்தமபாளையம் அருகே சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானை: மூதாட்டி வீட்டை சேதப்படுத்தி அரிசியை தின்று தீர்த்தது

உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதியில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. அங்கிருந்த மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதுடன், அரிசியையும் தின்று தீர்த்தது.

Update: 2023-05-30 18:45 GMT

அரிக்கொம்பன் யானை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரிக்கொம்பன் யானை வலம் வந்தது. அந்த யானை ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த யானையை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழக- கேரள எல்லையான புலிகள் சரணாலய பகுதியில் அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் விட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிக்கொம்பன் யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் தஞ்சம் அடைந்தது. பின்னர் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 27- ந்தேதி அதிகாலை கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் யானை புகுந்து அங்கு வீதி, வீதியாக ஓடியது.

மயக்க ஊசி செலுத்தி...

அப்போது யானை தும்பிக்கையால் தாக்கியதில் படுகாயமடைந்த பால்ராஜ் என்பவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கோவை மாவட்டம் டாப்சிலிப், ஆனைமலை ஆகிய பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன அந்த 3 யானைகளும் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் கட்டி போடப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.

இந்தநிலையில் கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி யானை கஜம் பகுதிக்கு அரிக்கொம்பன் யானை இடம் பெயர்ந்து சென்றது. இதனால் யானை மேகமலைக்கு சென்று விடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் நேற்று முன்தினம் யானை மேகமலைக்கு செல்லாமல் மீண்டும் திரும்பி வந்தது. அப்போது அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

வீ்ட்டை சேதப்படுத்தியது

பின்னர் உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதியில் யானை உலா வருவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இதனால் காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர், போலீசார் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் சண்முகா நதி அருகே சண்முகநாதன் கோவில் உள்ளது. அங்கு சரஸ்வதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று இவர், கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை அங்கிருந்த அரிசியை தின்று தீர்த்ததுடன், சமையலறையையும் சேதப்படுத்தியது. பின்னர் சரஸ்வதி மணியை அடித்து ஒலி எழுப்பினார். அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்றது. தற்போது அங்கு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையினர் பாதுகாப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சுமார் 30 மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. இதனால் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே யானை முகாமிட்டுள்ள சண்முகா நதி அணையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டிஆகிய கிராமங்கள் உள்ளன. இதனால் அந்த கிராமங்களில் யானை புகுந்து விடாமல் தடுக்க முக்கிய இடங்களில் சாலையை மறித்து தடுப்பு கம்பி அமைத்து வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்