தாளவாடி அருகேபஸ்களை வழிமறித்து கரும்பு தேடிய காட்டு யானைகள்
தாளவாடி அருகே பஸ்களை வழிமறித்து காட்டு யானைகள் கரும்பை தேடின.
தாளவாடி
தாளவாடி அருகே பஸ்களை வழிமறித்து காட்டு யானைகள் கரும்பை தேடின.
காட்டு யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதி வழியாக திண்டுக்கல், மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நெடுஞ்சாலையில் எப்போதும் சென்று வந்தபடி இருக்கும். இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள், யானைகள் ருசிக்கட்டும் என்று கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்செல்வார்கள். இதனால் கரும்புகளை ருசிப்பதற்காகவே அடிக்கடி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலையோரத்துக்கு வந்து விடுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
கரும்பை தேடியது
இந்த நிலையில் நேற்று மதியம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆசனூர் அருகே வனப்பகுதி வழியாக செல்லும்போது, சாலையோரம் நின்றிருந்த ஒரு காட்டு யானை திடீரென நடுரோட்டுக்கு வந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
அப்போது யானை பஸ்சை நோக்கி வந்தது. இதனால் பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். மேலும் யானை ஜன்னல் வழியாக துதிக்கையை உள்ளே நுழைத்து கரும்பு இருக்கிறதா? என்று தேடியது.
படம் பிடித்தனர்...
இந்த காட்சியை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் பஸ்சுக்குள் துதிக்கையை விட்டு தேடிய யானை கரும்பு இல்லை என்று உணர்ந்து கொண்டது.
அதன்பின்னர் யானை அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. இதனால் சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு யானை தானாக காட்டுக்குள் சென்றுவிட்டது. பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மற்ற வாகனங்களும் செல்ல தொடங்கின.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே பஸ் சென்றபோது, ரோட்டு ஓரமாக இருந்த ஒரு காட்டு யானை திடீரென நடுரோட்டுக்கு வந்து பஸ்சை வழிமறித்தது.
பின்னர் பஸ்சுக்குள் கரும்பு இருக்கிறதா? என்று ஜன்னலுக்குள் துதிக்கையை விட்டு, தேடியது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். சிறிது நேரம் தேடிப்பார்த்த யானை பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. அதன்பின்னரே பஸ் புறப்பட்டு சென்றது.