தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம்; கரும்பு சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம் செய்ததில் கரும்பு சேதம் அடைந்தது.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம் செய்ததில் கரும்பு சேதம் அடைந்தது.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி போன்ற வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன.
கருப்பன் யானை
இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை இரியபுரம் கிராம பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானையான கருப்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. எனினும் கருப்பன் யானையின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் மாதேவசாமி (வயது 28). இவர் தன்னுடைய 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார்.
கரும்பு சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை வெளியேறி மாதேவசாமியின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானையானது கரும்பை, தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது யானைகளின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து மாதேவசாமி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்தை பார்த்தபோது அங்கு கருப்பன் யானை நின்று கொண்டு கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கருப்பன் யானையானது, வனப்பகுதிக்குள் சென்றது. கருப்பன் யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் 1 ஏக்கா் பரப்பளவிலான கரும்பு சேதம் ஆனது.
யானையை பிடிக்க வேண்டும்
கருப்பன் என்ற ஆட்கொள்ளி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்துக்கு சென்று உள்ளதால் அந்த பகுதி விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.