ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து தொழிலதிபர் மனைவி பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து தொழிலதிபர் மனைவி பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தொழிலதிபர் மனைவி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொழிலதிபர்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள ரைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் இசக்கி. தொழிலதிபர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள ஆசிரியர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி (வயது 43). இவர்களுக்கு இம்மானுவேல்பிரபு என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.
கார் விபத்து
இந்நிலையில் நேற்று திசையன்விளையில் நண்பரின் கோவில் கொடை விழாவிற்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 2 மணியளவில் கோவிலிலிருந்து குடும்பத்தினருடன் அவர் காரில் புறப்பட்டு வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுழி வளைவு சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாவு
இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி மனைவி கல்யாணி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இசக்கி, அவரது மகன் இமானுவேல்பிரபு, மகள் ரம்யா ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். காரின் இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரும் அலறியுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் நீண்டநேரமாக காரின் இடுபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் காருக்குள் பிணமாக கிடந்த கல்யாணியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் படுகாயங்களுடன் இருந்த இசக்கி, இமானுவேல்பிரபு, ரம்யா ஆகியோரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.