ரெயில் தண்டவாளம் அருகே வங்கி ஊழியர் பிணமாக மீட்பு

தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளம் அருகே வங்கி ஊழியர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-28 18:45 GMT

தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளம் அருகே வங்கி ஊழியர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மகன் பிரணவ நந்தேஷ் (வயது 32). திருமணம் ஆகவில்லை. இவர் படர்ந்தபுளியில் உள்ள கனரா வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

நேற்று இவருடைய மோட்டார் சைக்கிள் மீளவிட்டான் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காங்கிரீட் ரீப்பர்கள் அருகில் அரை நிர்வாணமாக அமர்ந்த நிலையில் பிரணவ நந்தேஷ் இறந்து கிடந்தார்.

திடுக்கிடும் தகவல்

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நேற்று மதியம் பிரணவ நந்தேஷ் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ரெயில் தண்டவாளத்துக்குள் வந்து உள்ளார்.

பின்னர் தண்டவாளத்தின் நடுவில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி விழுந்த அவருக்கு பலத்த அடிபட்டு உள்ளது. அதேநேரத்தில் அவரது உடைகளும் சேதம் அடைந்து உள்ளன. அதன்பிறகு அவர் சேதம் அடைந்த தனது மேலாடைகளை கழற்றிவிட்டு ரீப்பர் அருகே உட்கார்ந்து இருந்த நிலையில் பரிதாபமாக இறந்து இருப்பது தெரியவந்தது.

தற்கொலையா?

இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இறந்த பிரணவ நந்தேஷ், எதற்காக ரெயில் தண்டவாளத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்? தற்கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்