கம்பம் அருகேதுளசி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கம்பம் அருகே துளசி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-07-30 18:45 GMT

கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர். இதேபோல் ரோஜா, அரளி, செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட மலர் மற்றும் துளசி சாகுபடியும் செய்கின்றனர். இந்நிலையில் கம்பம் அருகே உள்ள அண்ணாபுரம் பகுதியில் விவசாயிகள் ஒரே நிலத்தில் மலர், துளசி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். துளசி இலைகள் மலர் அங்காடியில் விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ பொருட்கள், நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

மேலும் சில நேரங்களில் மலர் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டாலும் துளசி சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுப்பதால் விவசாயிகள் துளசி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நன்கு உழுத நிலத்தில் துளசியை நேரடி விதையாகவோ, நாற்றாகவோ பயிரிடலாம் நேரடி சாகுபடி செய்யப்பட்ட துளசி செடிகள் அறுவடைக்கு 100 நாட்கள் தேவைப்படும். நாற்று முறையில் 75 நாட்களிலேயே அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்படும் துளசி உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திருச்சி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனைகளுடன் துளசி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்