பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகேகடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை
பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே கடையில் இருந்த பொருட்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
காட்டு யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்து நின்று அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தி, கரும்புகளை தின்று ருசி பார்த்து வருகின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து செல்வதும் வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறி பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சுற்றித்திரிந்தது. பின்னர் பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கோவில் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் கடைகள் உள்ள பகுதிக்கு வந்தது.
பொருட்களை சேதப்படுத்தியது
இதைப்பார்த்த கடைக்காரர்கள் யானைக்கு பயந்து கடைகளை அடைத்துவிட்டு் அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் காட்டு யானை கடையின் முன்பகுதியில் இருந்த தண்ணீர் பீப்பாய்களையும், நாற்காலிகளையும் எடுத்து போட்டு உடைத்தது. மேலும் கடையில் இருந்த சில பொருட்களையும் சேதப்படுத்தியது. அதன்பின்னர் சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து விட்டு மீண்டும் காட்டுக்குள் யானை சென்றுவிட்டது.
இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்து பொருட்களை சூறையாடியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை அடிக்கடி கடை இருக்கும் பகுதிக்கு வந்து எங்களை அச்சுறுத்தியும், பொருட்களை சேதப்படுத்தியும் வருகிறது. இதனால் நாங்கள் நஷ்டம் அடைந்து வருகிறோம். உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என அஞ்சுகிறோம். எனவே வனத்துறையினர் இதற்காக தனிக் கவனம் செலுத்தி இந்த பகுதியில் யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.