ஓட்டப்பிடாரம் அருகே11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-25 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூடத்திற்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11-ம் வகுப்பு மாணவன்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி கருப்பாயி.

இவர்களது மகன்கள் அஜய்பாரதி, சஞ்சய் பாரதி (வயது 16). இவர் பசுவந்தனையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வராததால் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சஞ்சய் பாரதி நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக கூறினார். இதையடுத்து அர்ஜூனன், கருப்பாயி வேலைக்கு சென்று விட்டனர். ஆனால், பள்ளிக்கு செல்வதாக கூறிய சஞ்சய் பாரதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் வீட்டை உள்புறமாக பூட்டிவிட்டு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினார்கள். ஆனால், கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு சஞ்சய் பாரதி தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக எப்போதும் வென்றான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சஞ்சய் பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்