நாலாட்டின்புத்தூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி
நாலாட்டின்புத்தூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
நாலாட்டின்புத்தூர்:
நெல்லை மாவட்டம் வடக்கு செழியநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் பேச்சிமுத்து (வயது 19). இவர் நாலாட்டின்புத்தூர் அருகே இடைசெவல் கிராமத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடையில் டீ சாப்பிட்டு விட்டு வருவதாக சக ஊழியர்களிடம் கூறி சென்றார்.
மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக பேச்சிமுத்து மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மணிமாறன் என்பவரை கைது செய்தனர்.