மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி சாவு
மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி உயிரிழந்தார்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி உயிரிழந்தார்.
பிளஸ்-1 மாணவி
நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் எட்வர்ட்தாமஸ். அவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கனிமொழி (வயது 15). லக்காபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கனிமொழி மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கயம்பாளையம் நட்டாற்றீசுவரர் கோவில் பகுதியில் ெசல்லும் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்றார்.
துணி துவைத்த பின்னர் குளிப்பதற்காக கனிமொழி ஆற்றில் இறங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகே குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அதை பார்த்து உடனே தண்ணீரில் தத்தளித்துகொண்டு இருந்த கனிமொழியை மீட்டனர்.
பெற்றோர் கதறல்
அதன்பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கனிமொழியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனிமொழியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களையும் கண்கலங்க செய்தது.