கடம்பூர் போலீசார் கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்த ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.
அதில் 3 கிலோ 400 கிராம் எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கே.என்.பாளையம் பாரஸ்ட் ரோடு அம்மன் நகரை சேர்ந்த முருகன் (வயது 43) என்பதும், தான் நடத்தி வரும் டீக்கடையில் வைத்து விற்பதற்காக குட்கா பாக்கெட்டுகளை கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தார்கள்.