கடமலைக்குண்டு அருகேகிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
கடமலைக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் புள்ளி மான்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி சுமார் 1 வயதுடைய மான் ஒன்று வந்தது. அப்போது அங்கிருந்த 50 அடி ஆழ தனியார் தோட்ட கிணற்றுக்குள் மான் தவறி விழுந்தது. கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்ததால் மான் தத்தளித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் மான் தத்தளிப்பதை பார்த்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கடமலைக்குண்டு தீயணைப்பு வீரர்கள் மூலம் கிணற்றில் விழுந்த மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கயிறு மூலம் புள்ளிமான் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மானுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.