எட்டயபுரம் அருகே அரசு பள்ளியை குழந்தைகளுடன் முற்றுகையிட்ட பெற்றோர்களால் பரபரப்பு
எட்டயபுரம் அருகே அரசு பள்ளியை குழந்தைகளுடன் முற்றுகையிட்ட பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணியடங்களை நிரப்பக்ேகாரி, அந்த பள்ளியை நேற்று குழந்தைகளுடன் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் காலிப்பணியிடம்
எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற முக்கிய பாடங்கள் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி கல்வித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பள்ளி முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து காலிபணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி நேற்று குழந்தைகளுடன் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார் மேல நம்பிபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்தார். அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தனவதி உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்தையில் உடன்பாடு
பேச்சுவார்த்தையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக அருகில் உள்ள சிங்கிலிபட்டி அரசு பள்ளியிலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதாக கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள், குழந்தைகளுடன் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நேற்று பள்ளிக்கூடம் நடைபெறவில்லை. இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.