கூடலூர் அருகேவிளைநிலங்களுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்:கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-01-05 18:45 GMT

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய கழுதைமேடு பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, கம்பு சோளம், மொச்சை, அவரை பயிர்வகைகள் மற்றும் தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, பப்பாளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி விளைநிலங்கள் அமைந்துள்ளதால் மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்குச் செல்கின்றனர். குறிப்பாக குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தகரங்களை தட்டி. ஒலி எழுப்பியும் பட்டாசுகள் வெடித்தும் குரங்குகளை விவசாயிகள் விரட்டியடிக்கின்றனர். ஆனால் குரங்குகள் மரத்திற்கு மரம் தாவி கிளையிலேயே அமர்ந்து கொள்கிறது. 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம், கூட்டமாக வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்