கடலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய வாலிபர் பிடிக்க சென்ற ஆசிரியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு
கடலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து வாலிபர் ஒருவர் பொருட்களை சூறையாடினார். அவரை பிடிக்க சென்ற ஆசிரியா்களை தாக்க முயன்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி கீழ்குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குள் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் திடீரென நுழைந்தார். பின்னர் பள்ளி வகுப்பறையில் இருந்த கணினி, ஜன்னல் கண்ணாடி, இன்வெர்ட்டர், புரொஜெக்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் உள்ளிட்டவற்றை சரமாரியாக அடித்து உடைத்து சூறையாடினார்.
இதைபார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, அந்த வாலிபரை பிடிக்க சென்றனர். அப்போது அந்த வாலிபர், இரும்பு கம்பியால் ஆசிரியர்களை தாக்க முயன்றார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி மற்றொரு வகுப்பறைக்குள் சென்றுவிட்டனர். மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையே அந்த வாலிபர் தாக்கியதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சேர், கணிணி, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கீழ் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன்(வயது 25) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரனை பிடித்த போலீசார், அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோல் பாஸ்கரன் நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியில் இருந்த சாமி சிலைகள் மற்றும் 3 வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் பங்க் கடைகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.