பவானி அருகேவிபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பவானி அருகே விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்

Update: 2023-05-20 22:10 GMT

பவானி அருகே விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்து

பவானி ஜம்பை அருகே பெரியமோளபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து ஜம்பை கலுங்கு ஏரி பாலம் வரையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. இதனால் ரோட்டின் இடையே சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண் குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மாற்றுப்பாதையில் செல்ல எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை. தோண்டப்பட்ட குழிக்கு அருகில் இரவு நேரத்தில் ஒளிரும் சிவப்பு பட்டை விளக்கும் கட்டப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இரவு நேரங்களில் இப்பகுதியில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று குழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பெரியமோளபாளையம் மற்றும் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பொதுமக்கள் விபத்துகளை தடுக்கக்கோரி நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'உடனடியாக குழி மூடப்படும்' என்று தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த தோண்டப்பட்ட குழி பொக்லைன் எந்திரம் மூலம் மூடப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார் மோதி விபத்து

இதேபோல் காடையாம்பட்டி பிரிவு அருகே சாலையிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த சாலையும் விரிவாக்கப்படுவதால் சிமெண்ட் கல்லைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் இருபுறமும் ஒளிரும் விளக்குகள் (ஸ்டிக்கர்கள்) பொருத்தப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த வழியாக கார் ஒன்று தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் எனவே சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள டிவைடருக்கு ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்