ஆப்பக்கூடல் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஆப்பக்கூடல் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானாா்.

Update: 2023-09-19 21:51 GMT

ஆப்பக்கூடல் அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்றபோது பவானி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

அந்தியூரை அடுத்த பொதியாமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் சங்கரநாராயணன் (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதியாமூப்பனூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் நேற்று முன்தினம் சிலைகள் அனைத்தும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.

நீரில் மூழ்கினர்

இந்த ஊர்வலத்தில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் சங்கரநாராயணனும் கலந்து கொண்டார். சிலையை கரைத்துவிட்டு அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சங்கரநாராயணன் சென்றார். இதில் ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்தும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருட்டி விட்டதால் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

உடல் மீட்பு

இந்த நிலையில் நேற்று தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள பாறை பகுதியில் அவருடைய உடல் சிக்கி இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

பின்னர் சங்கரநாராயணனின் உடலை கவுந்தப்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்