அம்மாபேட்டை அருகேமீன் வலையில் சிக்கிய 6 அடி நீள மலைப்பாம்பு
அம்மாபேட்டை அருகே மீன் வலையில் 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள ஆரியாகவுண்டனூர் பகுதியில் மடத்துக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் பிடித்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பரிசலில் சென்று மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர் அப்போது வலையில் சிக்கிய மீன்களை பிடித்து எடுத்துக் கொண்டிருந்தபோது மீன் வலையில் 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மீனவர்கள் சுதாரித்து கொண்டு பாம்போடு சேர்த்து மீன் வலையை லாவகமாக பிடித்தபடி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை சென்னம்பட்டி அருகே கொமராயனூரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.