வாழப்பாடி அருகே நாயக்கர் கால நினைவுக்கல் கண்டுபிடிப்புகுலதெய்வமாக கருதி வழிபாடு நடத்தும் பொதுமக்கள்

வாழப்பாடி அருகே நாயக்கர் கால நினைவுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. குலதெய்வமாக கருதி பொதுமக்கள் வழிபாடு நடத்துகிறார்கள்.

Update: 2023-01-19 20:14 GMT

வாழப்பாடி,

சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் பொன்.வெங்கடேசன், டாக்டர் சி.பொன்னம்பலம், செ.ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பேளூர் வசிஷ்ட நதிக்கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாய நிலத்தில், 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால நினைவுக்கல் ஒன்று இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருவதை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:-

300 ஆண்டுகளுக்கு முன் பேளூரை தலைமையிடமாக கொண்டு நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநிலமன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதியில் சிவாலய திருப்பணிகள் செய்ததோடு, வசிஷ்டநதியில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி, ஏரி, குளங்களும் அமைத்து நீர் மேலாண்மை செய்துள்ளனர். இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னமநாயக்கர் மற்றும் லட்சுமண நாயக்கர் நடுகற்களும், இவர்களது பெயரிலுள்ள ஊர்கள் மற்றும் ஏரிகளும் இதனை உறுதி செய்கின்றன. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், 3 ஆண்டுகளுக்கு முன்பு பேளூரில் நாயக்கர் கால வரலாற்று சிறப்பு மிக்க மூக்கறுப்புப் போர் கல்வெட்டைகண்டறிந்து உள்ளோம்.

தற்போது பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் மணியக்காரர் திருமூர்த்தி விவசாய நிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவுக்கல் நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகும். 300 ஆண்டு பழமையான இந்த நினைவுக்கல்லில் ஆணும், பெண்ணும் தம்பதியாய் இரு கைகூப்பி சிவலிங்கத்தை வணங்குவதைப்போல சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த நினைவுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னமநாயக்கர் வம்சாவழியை சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம். சிவன் கோவிலுக்கு பொன், பொருள் தானம் கொடுத்ததையோ, கோவில் திருப்பணி மேற்கொண்டதையோ நினைவு கூர்ந்து இந்த நினைவுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்