நாயக்கர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு

நத்தம் அருகே நாயக்கர் காலத்து நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-02-18 16:24 GMT

 நாயக்கர் காலத்து நடுகல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூரில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் மாணிக்கராஜ் மற்றும் வரலாற்று ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு கி.பி.16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குதிரைவீரன் நடுகல் ஒன்றை கண்டறிந்தனர். இதுபற்றி ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:-

நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள். பிற்கால பாண்டியர் காலத்தில், நத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் துவராபதி நாடு என்ற பிரிவின் கீழ் இருந்தது. துவராபதி என்பது வேளாண் சார்ந்த பிரிவு ஆகும்.

குதிரையில் அமர்ந்த நிலையில்...

சேர, சோழ நாடுகளின் வணிக பெருவழிப்பாதையாக திகழ்ந்த நத்தத்தில் இருந்து மதுரைக்கு பொருட்கள் சென்றிருக்கிறது. வரலாற்று சிறப்புகளை கொண்ட நத்தத்தில், பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு முன்பு குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட இந்த கல்லில் வீரன் ஒருவன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த நிலையில் இருக்கிறான். நாயக்கர் காலத்தில் வீரர்கள் அணியும் சிரசு அமைப்புடன் இந்த நடுகல் உள்ளது.

வீரனின் வலது கையில் பிடித்துள்ள ஈட்டியை முன்னோக்கி வீசி எறிவது போன்ற தோற்றத்திலும், இடதுகை குதிரையின் கடிவாளத்தை பிடித்த நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறுநில மன்னர் தோற்றம்

குதிரை வீரனின் வீர மரணத்துக்கு பிறகு, அவனுடைய 2 மனைவிகளும் சதி என்னும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சிற்பங்களாக குதிரைக்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு பெண்களும் நாயக்கர் காலத்து பட்டத்தரசிகள் அணியும் குந்தளம் எனும் கொண்டை அணிந்துள்ளனர். குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பங்களும் உள்ளன. அதில் ஒரு சேவகர் குதிரை வீரனுக்கு குடை பிடித்தபடி உள்ளார்.

பொதுவாக குதிரையும், சேவகர்களும் குடை பிடிக்கும் காட்சி குறுநில மன்னர், தளபதி ஆகியோருக்காக எடுக்கப்படும். நடுகல்லில் காட்டப்படும் இவற்றுடன் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குதிரைவீரன், நாயக்கர் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம்.

அங்கு நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த பிறகு, அவன் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். மேலும் நடுகல்லில் கல்வெட்டு சான்றுகள் இல்லாததால், சரியான செய்தியை அறிய முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்