கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

Update: 2023-10-16 18:45 GMT

சங்கராபுரம்

நவராத்திரி விழா

சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரியும், அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழாவில் 9 நாட்களும் முப்பெரும் தேவிகளுக்கு வழிபாடு நடைபெறும். இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையும், அடுத்த 3 நாட்கள் (4-வது நாள் முதல் 6-வது நாள் வரை) லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள்(7-வது நாள் முதல் 9-வது நாள் வரை) சரஸ்வதி தேவியையும் வணங்கி வழிபாடு செய்வது வழக்கம்.

இரு மாதங்களில்

பொதுவாக நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மற்றும் ஐப்பசி என 2 மாதங்களிலும் கலந்து வருகிறது.

இந்த விழாவில் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து கொலு பொம்மைகளை வைத்து பூஜை செய்து, வழிபடுவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரிவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

துர்க்கை அம்மன் கோவில்

சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதேபோல் சங்கராபுரம் வாசவி அம்மன், பாலமேடு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், சன்னதி தெரு மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவரங்கம் அரங்கநாதா்

ரிஷிவந்தியம் அருகே உள்ள திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று உற்சவர் ரங்கநாயகி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் உற்சவர் முத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்