சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.;

Update: 2023-10-14 19:28 GMT

நவராத்திரி விழா

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 42-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரம் நடக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) மதுரை மீனாட்சி அலங்காரமும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது. 18-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 19-ந்தேதி துர்க்கை அலங்காரமும், 20-ந்தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 21- ந்தேதி மாரியம்மன் அலங்காரமும், 22-ந்தேதி லெட்சுமி அலங்காரமும் நடக்கிறது.

லட்சார்ச்சனை

இதையடுத்து, 23-ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதலும் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், விஜயதசமி அன்று வரையும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. லட்சார்ச்சனையை சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர்.

வழக்கமாக திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டும் இக்கோவில் திறந்திருக்கும். நவராத்திரியையொட்டி 10 நாட்களும் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையருமான லட்சுமணன் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் அசனாம்பிகை மற்றும் கோவில் பணியாளர்கள், மதுரகாளியம்மன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்