ஆகாயத்தாமரை செடிகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படும்

வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்படும் ஆகாயத்தாமரை செடிகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-18 18:45 GMT

வடுவூர்:

வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்படும் ஆகாயத்தாமரை செடிகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆகாயத்தாமரை அகற்றும் பணி

திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ள ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை மாவட்ட வனத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அகற்றும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இயக்குனர் தீபக் ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். கலெக்டர் .சாருஸ்ரீ கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் க.அறிவொளி, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தணா மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயற்கை உரமாக தயாரிக்கப்படும்

பின்னர் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா கூறுகையில், வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் வடுவூர், தென்பாதி, வடபாதி, மேல்பாதி, சாத்தனூர், எடமேலையூர், எடகீழையூர், கட்டக்குடி, கருவாக்குறிச்சி, பேரையூர் ஆகிய கிராமங்களில் 1,336 ஏக்கர் நேரடியாகவும், 9,200 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. பறவைகள் சரணாலயமாக விளங்கும் இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் தமிழகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் உள்பட 2,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். வடுவூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அதனை மக்கிய இயற்கை உரமாக மாற்றும் பணி 5 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. இதை 45 நாட்களில் மட்க வைத்து இயற்கை உரமாக மாற்றி அதை தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கப்படுகிறது.

5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி

இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தி 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்