தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,486 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,486 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சமரச தீர்வு காண்பதற்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார்.
இதில் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜய் ஆனந்த், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரகுபதிராஜா, குற்றவியல் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சிந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
அதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 3,669 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. அதில் சிவில், ஜீவனாம்சவம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் என 1,486 வழக்குகளில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 910 மதிப்பிற்கு சமரச தீர்வு ஏற்பட்டது. தீர்வு காணப்பட்ட வழக்கிற்கு ஆணை வழங்கப்பட்டது.